ஜீவநாடி அற்புதங்கள்....2..
''ஆவி'' விரட்ட அகத்தியர் சொன்ன பரிகாரம் ....
'நன்றாக இருந்த பையன், இப்போ பித்து பிடித்த மாதிரி ஆகிவிட்டான். என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவன் குணம் ஆவானா மாட்டானா?' என்று 22 வயது மகனை அழைத்து வந்து என்னிடம் கேட்டாள் அவனது தாய்.
பையனை பார்த்தேன், சாதாரணமாகத்தான் இருந்தான். அவன் தாய் சொல்கிற அளவுக்கு எந்தவித பாதிப்புக்கும் ஆளானதாக தெரியவில்லை.
'என்ன நடந்தது?'
'ஒன்றுமில்லை, ஒன்றரை வருஷத்திற்கு முன்பு சேத்துப்பட்டு பலத்திலே ராத்திரி ஒரு மணிக்கு தனியாக வண்டி ஒட்டிக் கொண்டு வந்திருக்கான். பாலத்தை விட்டு இறங்கியதும், எதோ ஜில்லுன்னு ஒடம்புல பட்டிருக்கு அதற்கு பிறகு இவன், இவனாக இல்லை.
'இது எப்படி உங்களுக்கு தெரியும்?'
'அதுவரைக்கும் நடந்ததை இவன் நண்பர்கள் என் கிட்டே சொன்னார்கள். இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் அதுவரை பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டிபன் சாப்பிட்டிருக்கான். சினிமாவுக்கும் போயிருக்கான், ஜாலியா அரட்டையும் அடிச்சிருக்கான்.'
'டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிச்சிங்களா?'
'கட்டினோம். என்னவெல்லாமோ மருந்து கொடுத்தாங்க, ஒன்னும் குணமாகலே. நீங்க தான் அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்டு தரணும்.
'அது சரி...நீங்க என்ன நினைக்கிறீங்க?
'யாரோ செய்வினை வச்சுட்ட மாதிரி தெரியுது.'
'எதுக்காக வைக்கணும்?'
'அது தெரியாதுங்க. அக்கம் பக்கத்துலே இருக்கிறவுங்க சொல்றதைத்தான் உங்க கிட்ட சொல்றேன்.'
'சரி இதுக்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீங்களே?'
'சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்கு இவனை அழைச்சுட்டு போனோம். 45 நாட்கள் அங்கேயே தங்கி, பூஜை பரிகாரங்களையும் செய்து பார்த்து விட்டோம். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இவ்வளவு சொல்லிக் கொண்டிருந்த போது அந்த பையன் மவுனமாகவே இருந்தான். வாய் திறந்து பேசவே இல்லை.
என்னதான் இருக்கும் என்பதை அறிய எனக்கு ஆவல். இருந்தாலும் அதை வெளியில் கட்டிக் கொள்ளாமல் அகத்தியரை வணங்கி, ஜீவநாடியை பிரித்தேன்.
ஜீவநாடியிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. முதலில் எனக்கு இது அதிர்ச்சியை தந்தது. மறுபடியும் பிரார்த்தனை செய்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
மறுபடியும் எந்த பதிலும் அகத்தியர் சொல்லவே இல்லை. தன்னம்பிக்கையோடு மறுபடியும் மறுபடியும் பிரித்துப் படித்தேன்.
ஒன்பதாவது தடவையாகத்தான் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.
'இவனுக்கு பதில் சொல்ல இந்த இடம் ஏற்றதல்ல. செய்வினையை அகத்தியன் நம்பவில்லை என்றாலும், ஒரு துர்தேவதை இவனுக்குள் புகுந்திருப்பதால் அந்த தேவதையோடு அகத்தியன் பேச விரும்பவில்லை. எனவே ஒரு அஷ்டமி தினத்தில் இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் சென்னை நகரின் பிரசித்திப் பெற்ற தேவாலயத்தில் இது பற்றி விளக்குவோம்' என்றார்.
பிறகு என்னிடம், 'உன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள். அதற்குரிய மந்திரம் இது'. என்று சொல்லி சில மந்திரங்களை உபதேசித்தார்.
அந்த மந்திரங்கள் இது வரை நான் கேள்விப்படாதது. படிக்க கஷ்டமாகத்தான் இருந்தது. பொறுமையாகவும், நிதானமாகவும் நான் மூன்று தடவை அப்போதே சொல்லி முடித்தேன்.
இந்த மந்திரங்களை சொல்லி முடித்ததும் அதுவரை பொறுமையாக இருந்த அந்தப் பையனின் முகத்தோற்றம் மாறியது. திடீரென்று விழுந்து விழுந்து சிரித்தான்.
அந்த சிரிப்பு அவனுடையதாக இல்லை.பெண்ணின் இனிமையான காதல் சிரிப்பு போல் இருந்தது. ஒரு ஆண் மகனிடமிருந்து திடீரென்று பெண் குரலில் பேச்சு வந்ததால் நான் உட்பட அந்த பையனின் தாயும் சேர்ந்து வெலவெலத்து போனோம்.
என்னதான் எனக்கு அகத்தியர் பாதுகாப்பு மந்திரத்தை சொன்னாலும் திடீரென்று இப்படி அவன் பெண் குரலில் பேசுவான் என்பதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
அந்த தாய் தன் பையனுடைய இந்த நிலையை கண்டு பொங்கி பொங்கி அழுதாள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவன் ஒரு பெண் போல சிரித்துக் கொண்டிருந்தான்.
நான் அவனை முழுமையாக எடை போட்டேன்.இதற்கு கொஞ்சம் மனதைரியமும் தேவைப்பட்டது. அதோடு அகத்தியர் எனக்கு கொடுத்த அந்த பாதுகாப்பு மந்திரமும் கை கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சூழ்நிலையில் அவனோடு நான், என் அறையில் ஒரு நிமிடம் கூட இருந்திருக்க முடியாது.
பத்து நிமிடங்களுக்குப் பின் அந்தப்பையன் லேசாக மயக்கமடைந்து தரையிலேயே படுத்து விட்டான். சிரிப்பும் நின்று விட்டது.
சிறிது நேரத்துக்கு பின்பு அவனது தாயாரிடம் அகத்தியர் சொன்னதை சொல்லி, எதிர்வரும் அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்த தேவாலயத்திற்கு பையனை அழைத்து வர சொன்னேன்.
அங்கும் இப்போது நடந்தது போல் ஏதேனும் நடந்தாலும் நடக்கலாம் என்று மனதிற்கு தோன்றியதால், மேலும் சில நபர்களோடு தக்க துணையோடு வரும்படி அந்த பையனின் தாயாரிடம் கேட்டுக் கொண்டேன்.
அந்த தேவாலயத்தின் முன்பு அஷ்டமி நேரத்தில் மாலை வேளையில் அகத்தியர் ஜீவநாடியோடு காத்துக்கிடந்தேன். அவர்கள் வரும் வரை அகத்தியர் சொன்ன பாதுகாக்கும் மந்திரத்தையும் சற்று பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் அந்த பையனும், அவனை சேர்ந்தவர்களும் வந்தார்கள். பையன் முகத்தில் களை இருந்தது. சுறுசுறுப்புக்கூட அபாரமாக இருந்தது. மற்றவர்கள் முகத்தில் மட்டும் சற்று பயம் தெரிந்தது.
என் முன் வந்து அமர்ந்த அவனை மேற்கு பார்த்து உட்கார சொன்ன அகத்தியர், அவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
'இவன், ஒரு பெண் மீது காதல் கொண்டிருந்தான். முதலில் இவனது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத அந்த பெண் பின் இரட்டிப்பு மடங்கு இவன் மீது ஆசை கொண்டாள். பிறப்பில் அவள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவள். இருந்தாலும் திருமணம் செய்தால் இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மனதில் உறுதி பூண்டாள்.
திருமண விஷயமாக அவள் பெற்றோர் முயற்சித்தபோது பெற்றோரிடம் தன் எண்ணத்தை வெளியிட்டாள். வழக்கம் போல் எல்லாப் பெற்றோர்களும் சொல்வது போல் அவளது பெற்றோர்களும் சொன்னார்கள். பெற்றோர் இந்த திருமணத்திற்கு தடைவிதித்தாலும் இதையும் மீறி தான் இந்தப் பையனை துணிந்து மணந்து கொள்ளலாம், என்று நினைத்தாள் அந்த பெண். அதன்படி இவனை தேடி ஓடி வந்திருக்கிறாள்.
ஆனால், இந்தப் பையன் சட்டென்று பேச்சு மாறி இரண்டாண்டுக்கு பின் திருமணம் செய்யலாம் என்று மழுப்பியிருக்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் சட்டென்று 'சேத்துப்பட்டு (சென்னை) ரெயில் நிலையத்துக்கு வந்து ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.
நல்லவேளை அவள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை, கடிதமும் எழுதி வைக்கவில்லை.
தன்னால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை உணர்ந்த இவன், தினமும் நள்ளிரவில் அந்த 'சேத்துப்பட்டு மேம்பாலத்தில் நின்று அவளுக்காக கண்ணீர் சிந்துவது வழக்கம். அந்த பெண்ணும் அவன் நினைப்பிலே இறந்து போனதாலும், இறந்து போன அந்த ஆவி சட்டென்று இவனுக்குள் புகுந்து கொண்டது. ஆகவே அன்று முதல் இன்று வரை இவனை ஆட்டிக் கொண்டிருப்பது அந்த பெண்ணின் ஆவிதான்...
இவ்வாறு ஒரு நீண்ட கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் அகத்தியர். இந்த உண்மை அந்தப் பையனின் தாயார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.
''இப்போது அவனுள் புகுந்த ஆவியை போக்குவது எப்படி?' என்று கேட்டாள் அவனது தாய். இதற்கு அகத்தியர் விளக்கம் அளித்தார்.
'இது அதர்வண வேதத்தை சேர்ந்த பரிகாரம் தொடர்புடையது. சோட்டாணிக்கரை பகவதி கோவிலுக்கு சென்றிருக்கும் பொழுதே இந்த பரிகாரம் செய்திருக்க வேண்டும். எனினும் இப்பொழுது இந்த தேவாலயத்துக்கு சென்று பாதிரியார் கையில் சிலுவை ஒன்றை ஆசீர்வாதம் பெற்று அதனை இவன் கழுத்தில் அணியட்டும்.
இல்லையென்றால் வேறு எங்கேயாவது சென்று தினமும் பைபிளை முதலிலிருந்து கடைசி வரை இந்த பையனுக்காக மற்றவர்கள் முப்பது நாட்கள் படிக்கட்டும். இல்லையென்றால் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று பதினெட்டு நாட்கள் பிரார்த்தனை செய்து வரட்டும்.
இறந்த அந்தப் பெண் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவளாக இருப்பதால் இதை செய்ய சொன்னேன். அந்த பெண்ணின் தொந்தரவு இனிமேல் இவனுக்கு இருக்காது. அதற்காகத்தான் உங்களை இந்த புனிதமிகு தேவாலயத்திற்கு வர சொன்னேன். இவ்வாறு அகத்தியர் கூறினார்.
அந்த பையனின் சொந்தக்காரர்களுக்கு அகத்தியர் சொன்னதில் சிறிதும் உடன்பாடில்லை. வேறு மதத்தை சேர்ந்த தாங்கள் பைபிள் படிப்பதா? என்று கடும்கோபம் அடைந்தனர். என்னிடமும் வாக்குவாதம் செய்தனர்.
'ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் அகத்தியர் சொன்னதை சொன்னேன். மற்றவை உங்கள் இஷ்டம். நான் எதுவும் வட்புறுத்தவில்லை' என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்.
ஒன்றரை மாதம் கழித்து அந்த பையனும், அவனுடைய தாயும் என்னைத்தேடி வந்தனர்.
அகத்தியர் சொன்னபடியே அத்தனை பிரார்த்தனைகளையும் ஒன்று விடாமல் செய்து விட்டதாகவும், இப்பொழுது அவன் முற்றிலும் நல்லபடியாக மாறி விட்டதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார்.
அகத்தியருக்கு நன்றி கூரிய நான், ஒன்றை மட்டும் அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டேன். 'இனிமேல் இப்படிப்பட்ட ஆவி, மதம் விஷயத்தில் என்னை மாட்டி விடாதீர்கள்' என்றேன்.
இது வரை அப்படிப்பட்ட தொந்தரவுகள் வரவில்லை.
நன்றி - ஹனுமன் தாசன் ஐயா...
குறிப்பு : ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் அகத்தியரின் அருளாசியல் மாசி மகம் (12.03.2025) முதல் ஜீவநாடி படிக்க துவங்கியுள்ளோம். முகவரி : ''பண்டிட்" லக்ஷ்மி தாச சுவாமிகள், 26/6, ஸ்ரீ விருட்ச பீடம், கிச்சகதியூர், இலுப்பபாளையம் அஞ்சல், சிறுமுகை - 641302, மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம். செல் : 7397290727.